உரை
---------
நெதர்லாந்தில் 16.03.2024 அன்று "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தலைப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி விழா ஒன்று நடந்தது. அதில் எனக்கும் ஒரு பேச்சை நிகழ்த்த சந்தர்ப்பம் தந்து அழைத்தார்கள். நானும் எனது நன்பர் தியானும் அங்கு சென்றோம். ஆனால் அவர்களுக்கு நேரம் போதாமையால் எனது ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் கேட்க வாய்ப்பு இருந்தது.
கீழே அந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட எனது உரை:
வணக்கம்,
நாங்கள் ஆண்கள், காற்சட்டை, சேட், கோட் சூட் போட்டபடி இங்கு வந்துள்ளோம். ஆனால் பெண்கள் பாரம்பரிய கலாச்சார ஆடையில் சாறிகட்டி வந்துள்ளீர்கள், இளம் பெண்கள், சிறுமிகள் கூட கலாச்சார உடையே அணிந்துள்ளீர்கள். ஆக இந்த 'பண்பாடும் கலாச்சாரமும்' பெண்களுக்கு மட்டும்தானா ? ஆண்களைப்போல பெண்களும் மாற்று உடையில் வந்தால் இங்கு 'யாருக்கு யாரால் என்ன பிரச்சினை உண்டாகும்?
நல்லது
2009 இற்கு பிறகு பெண்தலைமத்துவம் என்ற சொல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மனிதர்களின் இதுவரை அறியப்பட்ட காலத்தில் பெண்களே தலைமைத்துவம் வகித்துள்ளார்கள். இதை பல அறிஞர்களின் நூல்களின் மூலம் அறியமுடிகின்றது.
உதாரணமாக நான் 35, 40 வருடங்களுக்கு முன்பு படித்த "வோட்காவில் இருந்து கங்கை வரை" என்ற நூலில் ஆதிகாலத்தில் இருந்த பெண்தலமைத்துவம் பற்றிய குறிப்பு இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது.
அதேபோல் பிரீட்ரிச் ஏன்கல்ஸ் (Friedrich Engels) எழுதிய
"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் வேட்டையாடுதலும் சேகரித்தலும் பெண்களின் வேலையாக இருந்தது என்று எழுதுகிறார். ஆதியிலே ஆண்களே பெண்களுக்கு பணிவிடை செய்பவர்களாக இருந்துள்ளனர். பெண்களுக்கு பல குழந்தைகள், யாருக்கு யார் தந்தை என்று தெரியாது. பெண்களின் சேகரிப்புகளை அனுபவிக்க வாரிசுகளை உருவாக்க வேண்டிவருகிறது. இதை ஆண்கள் தம்வசப்படுத்த ஒருவனுக்கு ஒருத்தி எனும் முறைமையை உருவாக்கி பெண்களை தமக்குக் கீழ் என்றாக்கி அதிகாரத்தை தம்வசப்படுத்துகிறார்கள். பின்னர் அதை வலுப்படுத்தும் வகையில் பல வரைமுறைகளை உருவாக்கி அதற்கு பல பெயர்கள் சூட்டுகிறார்கள்.
ஆனால் இது மாறும் அதற்கான அறிகுறிகள் கண்முன்னே தெரிகிறது. இயற்கை என்பது புதுப்பித்தல். அது மனிதப்பண்பாட்டில் பாரம்பரியத்தில் மட்டும் எப்படி நிகழாமல் இருக்கும்.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் காடுகளும் வனவிலங்குகளும் தீயில் எரிந்தன. இப்போது மீண்டும் அது புதியதாய் துளிர்த்து நிற்கிறது. ஆண்களின் உலகம் அவர்களின் கையை விட்டு பெண்களிடம் வந்துகொண்டு இருக்கிறது.
கொரோனா காலத்தில் எனது நகர கடைத்தெருவில் ஒரு இளம் பெண் மஸ்க்கால் முகத்தை மூடியபடி எதிரே வந்துகொண்டு இருந்தாள். அவளின் வெள்ளை நிற T-Shirt இல் கறுப்பு நிறத்தில் 'The Future is Female ' என்று எழுதப்பட்டு இருந்தது. அவளின் நிமிர்ந்த நடையும் அந்த வாக்கியமும் அவளை கடந்து சென்றபின்னும் இன்றுவரை அப்படியே காட்சியாக என்னுள் இருக்கிறது.
ஆடைகளில் படங்களும் எழுத்துக்களும் இருப்பது சாதாரண விடயம் ஆனால் அது எனக்கு சாதரணமாக படவில்லை. பின்னர் Google இல் அவ் வார்த்தைகளை தேடினேன். 2017 இல் Miller என்று ஒரு நபர் அமெரிக்காவில் கட்டுரை எழுதியிருக்கிறார் அதில் 'The Future is Female என்ற இவ்வார்தைகளை' தாங்கியபடி போராட்டம் நடத்தும் பெண்ணியவதிகளை சாடுகிறார். இவர்கள் ஆண்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல மாற்று பாலினத்தவர்களுக்கும் ஆபத்து இதை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஆக ஆண்களுக்கு பயம் பிடித்துவிட்டது.
இலங்கையில் பல YouTube தமிழ் இளைஞர்கள் தானதர்மங்களில் ஈடுபடுவதை கண்கிறோம். அதில் உதவிகோரும் பெண்களின் வாழ்க்கையை விலாவாரியாக விபரிக்கிறார்கள். நான் பார்த்த அத்தனை கானோளிகளும் கணவனால் அல்லது காதலனால் ஏமாற்றப்பட்ட சித்திரவதைகளுக்கு ஆட்பட்ட பெண்களின் கதைகளாகவே இருக்கிறன. குழந்தைகளோடும் ஊனமுற்ற வயதான பெற்றோர்களுடனும் ஒவ்வொரு நாளையும் போராட்டமாகவே கழிக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் உதவிகளுடன் செல்லும் YouTube இளைஞர்கள் பொலீஸ்காரர்களைப்போல் குறுக்குவிசாரனை நடத்துகிறார்கள். அப்பெண்களின் தனிப்பட்ட விடயங்களை அம்பலத்துக்கும் கொண்டுவந்து அவர்களின் ஊரையும் விலாசத்தை காட்டுகிறார்கள்.
சில பெண்கள் இதனால் தாங்கள் பொதுவேளியில் அவதிப்பட்ட விபரங்களையும் கூறிவேதனைப்பட்ட சம்பவங்களும் உண்டு.
இலங்கையில் உள்ள தமிழ் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதும் பல திருட்டு, கொலை என்று குற்றச் செயலில் ஈடுபட்டு அழிவை நோக்கி போகிறார்கள்.
தலைமைத்துவம் பெண்களிடம் கைமாறினால் மட்டுமே இந்தச் சமூகத்தை காப்பாற்ற முடியும். இதுவே இயற்கையின் தேர்வு. இது உலகம் பூராகவும் நிகழ்கிறது. இந்தமாற்றத்தில் தமிழ் பெண்களின் பங்களிப்பு என்ன என்பதே எனது கேள்வி.
இங்கு நாட்டியத்துக்கு வயது ஒரு தடையில்லை என்று உணர்த்தி ஒரு சகோதரி அழகாக ஆடினார். கவிதைக்கு முதுமையும் இயலாமையும் தடையில்லை என்பதை உணர்த்தி ஒரு அம்மா தனது மகளின் மூலம் தன் கவிதையை படிக்க வைத்தார். அக்கவிதை ஒரு புரட்சிக் கவிதை என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள். காமக் கவிஞர்களின் வர்னனைகளில் மயங்காதே என்று அவரின் தள்ளாடும் வயதில் பாடியது ஆச்சரியத்தை அல்ல, எனக்கு மகிழ்ச்சியே தந்தது. சகோதரிகளே. மாற்றத்துக்கான அறிகுறியை நான் உங்கள் மத்தியில் காண்கிறேன். கிழே வலது பக்கத்தில் ஐந்து பெண்கள் மும்மரமாக ஏதோ குறிப்புக்கள் எடுத்துக் கொண்டும், பரிசுகளை தயாரித்துக் கொட்டும் இருக்கிறார்கள். இன்னுமொருவர் நிகழ்ச்சி நிரலை கையில் வைத்தபடி ஒவ்வொருவரிடமும் ஓடுகிறார். பரபரப்பாக இருக்கிறார்கள். மாற்றம் நிகழ்கிறது.
30 வருட யுத்தத்தில் நாம் இழந்தது பல அதில் ஒன்று கல்வி. யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் அதுவே இருந்தது. உலகத்தோடான தொடர்பை, கல்வியை இழந்த நாங்கள் எப்படி மாற்றுச் சிந்தனைகளை ஏற்கவும் உருவாக்கவும் பழகுவோம்?
உலகோடு ஒட்டி எமது அறிவை வளர்க்கவேண்டும்
1915 இல் யேர்மனியில் கொல்லப்பட சமூக போராளி, பெண் றோசா லக்சம்பர்க் கூறியுள்ளார் :' மாற்று சிந்தனையாளர்களின் சுதந்திரமே, சுதந்திரம்'
ஆகவே அறிவியல், சிந்தனை என்று நாம் பன்முகப்பட்டு வளரவேண்டும். கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் அது Eloaner Roosevelt என்பவரின் பொன்மொழி : 'நல்ல பெண் என்று பெயர் எடுத்தவர்கள், மிக அரிதாகவே சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.'
நன்றி
வணக்கம்









