‘‘திருமணத்துக்குத் தலைமையேற்றேன்... காரணம்..?!’’ - நெகிழும் கௌசல்யா
ஒரு குடும்பத்தின் கௌரவமே அந்த வீட்டுப் பெண்ணின் திருமணத்தில்தான் இருக்கிறது என்கிற எண்ணம் நம் சமூகத்தில் காலம் காலமாக வேரூன்றியிருக்கிறது. ஒரு பெண் தனக்குப் பிடித்த ஒருவனைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்டால் அவ்வளவுதான். மகள் என்றும் பார்க்காமல் கொலை செய்யும் அளவுக்குச் சமூகத்தில் சாதி வெறி மேலோங்கி இருக்கிறது. இந்த ஆணவக்கொலை பாதிப்பின் சாட்சியாக நம் முன்பு நிற்பவர், கௌசல்யா.
இவரது கணவர் சங்கர், ஆதிக்கச் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டதை தமிழகத்தின் மனசாட்சி அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. சங்கர் மரணத்துக்குப் பிறகு தனக்கென ஒர் அரசுப் பணியைத் தேடிக்கொண்டு, சாதி ஒழிப்பு போராளியாகச் செயல்பட்டுவருகிறார் கௌசல்யா. நேற்று சென்னையில் நடைபெற்ற கோகுல கிருஷ்ணன் - ஜோனாகலா ஜோடியின் ஜாதி மறுப்புத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்தார். அவரிடம் பேசினோம்.
‘‘சங்கர் கொலைக்குக் காரணமான திமிர் பிடித்த ஆதிக்கச் சாதி வெறியை அழிக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். எனவே, என்னுடைய வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் அது தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறேன். கோகுல கிருஷ்ணன் மற்றும் ஜோனா கலாவை முதன்முதலில் 'மனிதி' இயக்கத்தில் சந்திச்சேன். எங்களுக்குள் இருந்த ஒத்த சிந்தனை காரணமாக நண்பர்களானோம்.
கொஞ்ச நாளில் கோகுல கிருஷ்ணனும் ஜோனாவும் காதலிக்கிறது தெரியவந்துச்சு. வீட்டுச் சம்மதத்தோடு திருமணம் செய்துக்கப்போறதா சொன்னாங்க. 'நீங்கதான் எங்கள் திருமணத்தை தலைமையேற்று முன்னாடி இருந்து நடத்தணும்'னு சொன்னாங்க. ஏதோ விளையாடுறாங்கனு நினைச்சேன். ஆனால், சீரியஸாவே சொன்னாங்க. 'நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய ஆளில்லை. எத்தனையோ பெரியவங்க இருக்காங்க.
அவங்களை கூப்பிடுங்க'னு சொன்னேன். ஆனால், 'நீங்கதான் வரணும்'னு பிடிவாதமா சொன்னாங்க. நான் சாதி ஒழிப்பு போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வருவதாலும், கணவனை இழந்த பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் முன்னாடி நிற்கக் கூடாது என்ற மூடநம்பிக்கையை ஒழிக்கவும், என்னை இந்தத் திருமணத்துக்கு தலைமையேற்க வைப்பதாக அவங்க சொன்னது எனக்குப் பிடிச்சிருந்துச்சு. இதன்மூலம் சாதி ஒழிப்புப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக முடியும்னு நம்பினேன். அதனால், திருமணத்துக்குத் தலைமையேற்க சம்மதித்தேன்’’ '' என்கிற கெளசல்யாவின் குரலில் மகிழ்வும் நெகிழ்வும்.
''வருங்கால சந்ததியினரை சாதியற்றவர்களாக உருவாக்க, இது ஒரு சிறிய முயற்சி'' எனப் பெருமிதத்துடன் பேசத் தொடங்கினார்கள், புதுமணத் தம்பதியான கோகுல கிருஷ்ணன் - ஜோனாகலா.
தொடரும் ஜோனாகலா, ‘‘எனது சொந்த ஊர் நாகர்கோவில். சென்னையில் எம்.பில். படிக்கிறதுக்காக மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்தேன். சமூக முன்னேற்ற விஷயங்களில் என்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கிட்டேன். அப்படி ஒன்றாக 'புத்தர் கலைக்குழு'வின் பறையாட்டத்தில் பங்கேற்றபோது ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் கோகுல கிருஷ்ணனைச் சந்திச்சேன். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிச்சிருந்துச்சு. திருமணம் செஞ்சுக்க முடிவெடுத்தோம். கோகுல் வீட்டில் சம்மதிச்சுட்டாங்க. என் வீட்டில் ஆரம்பத்தில் மறுத்தவங்க, அப்புறம் கிரீன் சிக்னல் கொடுத்தாங்க.
கௌசல்யா ஆதிக்க சமூகத்தின் ஜாதி வெறியால் பாதிக்கப்பட்டவங்க. விலகி ஓடிடாமல், சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வர்றாங்க. எங்க சாதி மறுப்புத் திருமணத்துக்கு அவங்களைவிட சரியான தலைமை இருக்க முடியாதுனு நினைச்சோம். அவங்க வந்தது எங்க திருமண வாழ்க்கைக்குக் கூடுதல் பலத்தை கொடுத்திருக்கு. ஜாதி மறுப்புத் திருமணம் செய்யற ஒவ்வொருத்தரும் கடைசி வரை உறுதியோடு நின்று தங்கள் சந்ததியையும் சாதியற்றவர்களாக உருவாக்கணும்'' என்கிறார் அழுத்தமாக.