விவசாய குடும்பத்தில் பிறந்து UPSC-யில் வெற்றி; 6-வது முயற்சியில் சாதித்த பெலிக்ஸ் காபிரியேல் மார்க்!
ஒரு மார்க் தடையாயினும், மனசு தடையாவே இல்ல” என்று சொல்வது போலத் தான், தூத்துக்குடி மாவட்டம் மேலபனைகுளம் கிராமத்தைச் சேர்ந்த பெலிக்ஸ் காபிரியேல் மார்க் தனது 6-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்று 783-வது ரேங்க் பெற்றுள்ளார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளிப்படிப்பை சாத்தான்குளம் ஹென்ரி மெட்ரிக் பள்ளியில் முடித்த பிறகு, சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் ஆட்டோமொபைல் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார். தன் துறையில் வேலை கிடைக்குமென்று நம்பி முயற்சி செய்தார். ஆனால், பரிந்துரை இல்லாத காரணத்தால் பல தடைகளை சந்திக்க நேர்ந்தது.
பிறகு, தந்தையின் ஊக்கத்துடன் UPSC தேர்வுக்குத் தயார் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் தெரிந்துகொள்ளத் தேவையான அனைத்து விஷயங்களையும், அகாடமி மற்றும் ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டார். மூன்று முறை முதற்கட்டத் தேர்விலேயே தோல்வியடைந்தும், பின்னர் இரு முறை நேர்காணல் வரை சென்றும் வெற்றி சற்று தள்ளி விலகியது.
பொதுவாக பலர் எதற்கும் துணிவிழந்து விடும் ஒரு சூழ்நிலையிலும், "ஒரு மார்க் மட்டும் தான் மிஸ் பண்ணேன்" என்று மீண்டும் முயற்சி செய்து, இறுதியில் நாட்டின் மிக கடினமான தேர்வுகளில் ஒன்றான UPSC-யில் வெற்றி பெற்று, தன் குடும்பத்திற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
“எனது பெற்றோர்கள் எனக்கு தந்த ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாயிருக்காது. அவர்கள் என் பின்னணி மட்டுமல்ல, என் நம்பிக்கையும். இப்போது முழு கிராமமும் இந்த வெற்றியை விழாக் கொண்டாடுகிறது,” என பெருமிதத்துடன் கூறுகிறார் பெலிக்ஸ்.
கிராம மாணவர்களுக்கு அவர் சொல்லும் முக்கியமான செய்தி: "வெற்றிக்கு பக்கத்துல வந்துட்டோம்னு நின்னிடாதீங்க. கடைசி வரை முயற்சி பண்ணுங்க. வெற்றி நிச்சயம் உங்களுடையது தான்."











