தமிழ்நாட்டில் அடுத்தடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் மிக கனமழை : எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழையும் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ம் தேதிகளில் கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக, தஞ்சாவூரில் உள்ள மஞ்சளாறில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பெரம்பலூர், புது வேட்டக்குடி, சேந்தமங்கலம் (நாமக்கல்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழையும், நன்னிலம் (திருவாரூர்), லக்கூர் (கடலூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ் குறைந்துள்ளது. இருப்பினும், அநேக இடங்களில் இயல்பைவிட 2-4° செல்சியஸ் அதிகமாகவே வெப்பநிலை காணப்பட்டது. அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில் 41.3° செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸ் ஆக இருந்தது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
ஆகஸ்ட் 1: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 2: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 3: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 4 & 5: கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், பிற டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 6 & 7: கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
ஆகஸ்ட் 1 முதல் 5 வரையிலான ஐந்து தினங்களில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:
இன்றும், நாளையும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-38°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°C ஆகவும் இருக்கக்கூடும்.
ஆகஸ்ட் 1 முதல் 5 வரை, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இதேபோன்று, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் பல பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 65 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.